மராட்டிய மாநில துணை முதல் மந்திரி அஜித் பவார் தொடர்புடைய நிறுவனங்களுக்கு சொந்தமான 1,000 கோடி ரூபாய்க்கும் மதிப்புடைய சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. முடக்கப்பட்டுள்ள சொத்துகள் அனைத்தும் முறைகேடாக சம்பாதித்த பணத்தைக் கொண்டு வாங்கப்பட்டவை என வருமான வரித்துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மும்பை நாரிமன் பாயின்டடில் உள்ள நிர்மல் டவர் உள்பட 5 கட்டடங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. முடக்கப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் முறையாக வருமான வரியை செலுத்தியுள்ளதாக அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த மாதம் அஜித் பவாரின் உறவினர்களுக்கு சொந்தமான இரு ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.184- கோடி ரூபாய் வருமானம் கண்டறியப்பட்டதாக வருமான வரித்துறை கூறியிருந்தது.