ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். தற்போது, அந்நாட்டில் தலீபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், தலீபான்களின் ஆட்சிக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. மேலும், சில கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் தலீபான்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் காபுலில் உள்ள ராணுவ மருத்துவமனை அருகே இன்று இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இன்று மதியம் 2 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் மருத்துவமனை அருகே வெடித்துள்ளன.
இந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச்சூடு தாக்குதலும் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையில், தலீபான்களின் பாதுகாப்பு படையினரை குறிவைத்து ஐ.எஸ். அமைப்பின் ஹரொசன் பிரிவினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.