பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகரில் அக்டோபர் 31-ந் தேதி முதல் நவம்பர் 12-ந் தேதி வரையில் ‘சி.ஓ.பி.26’ என்று அழைக்கப்படுகிற சம்மந்தப்பட்ட தரப்புகளின் மாநாடு என்ற பெயரில் பருவநிலை மாற்றம் பிரச்சினை தொடர்பான ஐ.நா. உச்சி மாநாடு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மாநாட்டில், உலகளாவிய கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் மோடி உள்பட 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் நேரில் கலந்து கொண்டுள்ளனர். கிளாஸ்கோவில் நடைபெறுகிற பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. உச்சி மாநாட்டில் பாரீஸ் உடன்பாட்டின் விதிகள் உறுதி செய்யப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறுகையில், “பருவநிலை மாற்றம் குறித்து பள்ளிகளிலேயே கற்றுக்கொடுக்க வேண்டும். நமது வளர்ச்சி கொள்கைகள் மற்றும் திட்டங்களில் முக்கிய பங்காக பருவ நிலை மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவில் தூய்மை இந்தியா திட்டம், குடிநீர் இணைப்பு ஆகிய திட்டங்கள் குடிமக்களுக்கு பலன்களை மட்டும் அளிக்கவில்லை.
அவர்களின் வாழ்க்கை தரத்தையும் அளிக்கிறது. அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காக பள்ளி பாடத்திட்டங்களில் பருவநிலை மாற்றம் குறித்தும் இணைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. காலநிலை மாற்றத்தால், இந்தியாவில் மிகப்பெரிய சவாலை வேளாண் துறை எதிர்கொண்டுள்ளது” என்றார்.