இமாசலப்பிரதேசம் மாநிலத்தில் பதேபூர், ஜுப்பல்-கோத்காய் மற்றும் ஆர்க்கி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அக்டோபர் 30ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.
இந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று சட்டமன்ற தொகுதிகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
பதேபூர் சட்டமன்ற தொகுதியில் பவானி சிங் பதானியா 5,789 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஆர்க்கி சட்டமன்ற தொகுதியில் சஞ்ஜய் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஜுப்பல்-கோத்காய் சட்டமன்ற தொகுதியில் ரோகித் தாக்குர் 6,293 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட பாஜகவின் முக்கிய தலைவரான சேட்டன் சிங் ப்ரக்தா, ஆளும் பாஜகவின் வேட்பாளரை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தார்.
மண்டி பாராளுமன்ற தொகுதியில் பாஜக தோல்வி முகத்துடன் உள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மறைந்த முன்னாள் முதல்-மந்திரி வீரபத்ர சிங்கின் மனைவி பிரதீபா சிங் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்த நிலையில் வெற்றி அடைந்துள்ளார்.
இந்நிலையில் அம்மாநில முதல்-மந்திரி ஜெய் ராம் தாக்குர் மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குவதாக தெரிவித்துள்ளார்.