கேரளாவில் ஊதிய உயர்வு கோரி அரசு பேருந்து ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களின் போராட்டத்தால் நேற்று நள்ளிரவு முதல் பேருந்து ஓடவில்லை. இதனால், பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
தொலை தூர பேருந்துகள் இயங்காதால் மருத்துவமனைகள் உள்பட பல்வேறு காரணங்களுக்காக செல்ல வேண்டிய பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர். மருத்துவமனைகள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டிய பயணிகளுக்கு தனியார் பேருந்துகள் மூலம் மாற்று ஏற்பாடுகளை போலீசார் செய்து கொடுத்தனர்.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்தப்படும் ஊதியம் கடந்த 9 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை எனக்கூறி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் 48 மணி நேரம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளன. இதற்கிடையே, கேரள அரசு போக்குவரத்து கழகத்தை அத்தியாவசிய சேவைகள் (எஸ்மா) சட்டத்தின் கீழ் கொண்டு வர அரசு ஆலோசித்து வருவதாக போக்குவரத்து துறை மந்திரி அண்டோனி ராஜூ தெரிவித்துள்ளார்.