தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் அவதியடைந்துள்ளனர்.
சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 வது நாளாக தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். வடசென்னை பகுதிகளான புளியந்தோப்பு, வேப்பேரி, பெரம்பூர் கொளத்தூர் வில்லிவாக்கம், போரூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்தும் அவர்களுக்கு உணவு வழங்கியும் வந்தார். மேலும் மழைநீரை வெளியேற்றும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். இன்று தி.நகர் விஜயராகவா சாலையில் மழை, வெள்ள பாதிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். மாம்பல கால்வாய் பகுதியில் கழிவுகளை அகற்றும் பணிகளை முதல்-அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் இதனிடையே முதல்வர் ஸ்டாலின் ஆய்வு பணிகளை எதிர்கட்சியான அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன. தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவருமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து முதல்-அமைச்சரை விமர்சித்துள்ளார்.
காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் மழை வெள்ள பாதிப்பை முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தபடியே வருகிறார். அப்போது அங்கிருக்கும் வீடுகளில், மக்கள் வீட்டை விட்டு வெளியே வராதவாறு, கயிறு கட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் வீட்டிற்குள்ளிருந்தபடியே அந்தந்த வீட்டினர் முதல்-அமைச்சருக்கு வணக்கம் தெரிவிக்கிறார்கள்.. முதல்-அமைச்சரும் பதிலுக்கு வணக்கம் சொல்லியபடி மழைநீரில் நடந்து செல்கிறார்.. இந்த போட்டோவை பதிவிட்ட காயத்ரி ரகுராம், “இது செயல்படும் அரசா இல்லை செய்திக்கான அரசா நீங்களே சொல்லுங்கள் முதல்வரே” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.. அத்துடன் வீட்டின் முன்பு கட்டப்பட்ட அந்த கயிறை சிவப்பு கலரில் குறிப்பிட்டு சுட்டிக்காட்டி உள்ளார்.
காயத்ரி ரகுராம் பதிவிற்கு பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். காயத்ரிக்கு ஆதரவாகவும், அண்ணாமலை படகில் சென்றதை பதிவிட்டு சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் கலவையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்