நாட்டை முடக்கும் நடவடிக்கையானது எந்த நேரத்திலும் எடுக்கக்கூடியதொன்றென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதற்கான சுகாதார வழிகாட்டல்களை மாத்திரமே வெளியிட வேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டில் தற்போது மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது குறைந்து வருகிறது. சிலர் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமலும் இருக்கின்றனர்.
மீண்டுமொரு முடக்க தேவையா இல்லையா என்பதை நாட்டு மக்களின் நடத்தையே தீர்மானிக்கும்.
எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தில் நாடு மூடப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டால் அதிர்ச்சியடைய வேண்டாம். பொறுப்பற்ற சிலர் இரகசிய கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்கின்றனர்.
தற்போதைய, தீவிரமான சூழ்நிலையிலிருந்து மீள முயற்சிக்கும் நேரத்தில் இது போன்ற கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதையும் பங்கேற்பதையும் தவிர்க்குமாறு கோருகிறேன் என்றார்.
அத்துடன், உரிய தரப்பினரிடம் அனுமதி பெறாது முன்னெடுக்கப்படும் நிகழ்வுகள் ரத்து செய்யப்படலாம் எனவும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.
அதேபோல், அனுமதி பெறாமல் இது போன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பண்டிகை நாட்கள் நெருங்கும் பட்சத்தில் வர்த்தக நிலையங்களில் அதிகளவில் வாடிக்கையாளர்கள் கூடுவதனை தவிர்க்க வேண்டும்.
இந்தப் பண்டிகை காலத்தில் மீண்டும் ஒரு கொவிட் கொத்தணி உருவாகாமல் இருப்பதற்காக நாம் கவனத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.