இந்தியா – இலங்கை – மாலைதீவுகள் இடையிலான முத்தரப்பு கூட்டு கடற்பயிற்சிகள் 2021 நவம்பர் 27-28 ஆகிய திகதிகளில் நடைபெற்று வருகின்றன. கொழும்பு பாதுகாப்பு கூட்டுகுழுமத்தின் வழிகாட்டலின் அடிப்படையில் இந்த பயிற்சிகள் நடைபெறுவதுடன் கடற்பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்பினை ஒருங்கிணைப்பதற்கான முக்கிய செயற்பாடாகவும் இது அமைகின்றது.
கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுமத்தின் அவதானத்துடனான
இந்த நடவடிக்கைகள் நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை
தழுவியதாகவும் மூன்று கடற்படையினரதும் இயங்குதிறனை
மேம்படுத்துவதாகவும் அமைகின்றன.
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்.சுபத்ரா ரோந்து கப்பல் மற்றும் P8I நீண்டதூர கடல் ரோந்து விமானம், அதேபோல இலங்கை கடற்படைக்கு
சொந்தமான எஸ்.எல்.என்.எஸ்.சமுதுர ஆகியவை இப்பயிற்சிகளில் இணைந்திருக்கும் நிலையில் மாலைதீவு தேசிய பாதுகாப்பு படைக்கு சொந்தமான MNDF கடல் மார்க்க வேவு விமானமும் இவற்றுடன் இணைந்துள்ளன.
இந்த இரு நாள் பயிற்சிகள், அந்தந்த பிரத்தியேக பொருளாதார வலயங்களில் (EEZ) போதைப்பொருள் கடத்தல் தடுப்பு, தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் கடலில் மீட்பு நடவடிக்கைகள், வான் மார்க்கமான மீட்பு பணிகள் மற்றும் வினைத்திறன்மிக்க தொடர்பினை ஸ்தாபித்தல் ஆகிய விடயங்களில் கள ரீதியான ஈடுபாட்டினைப் பெற்றுக் கொள்வதற்கு வழிவகுத்துள்ளது.
கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழுமமானது கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான நான்காவது முத்தரப்பு மாநாட்டில் நிறுவப்பட்டதுடன் அதற்கான செயலகம் 2021 மார்ச் கொழும்பில் நிறுவப்பட்டது. மேலும் 2021 ஆகஸ்ட்டில் நடைபெற்ற கொழும்பு பாதுகாப்பு கூட்டுகுழுமத்தின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட மாநாடு பிராந்தியத்தில்
பொதுவான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளுதல் தொடர்பான புரிதல் மற்றும் சிறந்த இயங்குதிறனை அடைவதற்கான சிறந்த வாய்ப்புக்களை வழங்கியது.