ஒமிக்ரான்’ வைரஸ், இதுவரை கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ்களில் ஆபத்தானதாக அறியப்படுகிறது. இதனால் உலக நாடுகள் உஷாராக இருக்கின்றன. இருப்பினும் இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் தோன்றி, பெல்ஜியம், இஸ்ரேல், ஹாங்காங்குக்கு பரவி விட்டது.
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உலகளவில் குறைவாக இருந்தாலும், ஐரோப்பிய நாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவத்தொடங்கி இருப்பது புதிய பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதே போன்று, ஜெர்மனியிலும், இத்தாலியிலும் ஒமிக்ரான் வைரஸ் கால் பதித்துவிட்டது.
இந்நிலையில் புதிய வகை ‘ஒமிக்ரான்’ கொரோனா வைரசுக்கு எதிராக மத்திய அரசு என்ன செய்ய போகிறது என்று சுப்ரீம்கோர்ட் நீதிபதி என்.வி.ரமணா கேள்வி எழுப்பினார். முன்னதாக டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு விசாரணையின்போது, புதியவகை வைரஸ் தொடர்பாக தலைமை நீதிபதி இவ்வாறு கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதில் அளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், புதிய வகை வைரசினை சமாளிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்று நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.