பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் மாதம் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடரின் பல்வேறு அமர்வுகளிலும் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. குறிப்பாக, 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி., மணீஷ் திவாரி உள்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை சமர்ப்பித்தனர்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி., மணீஷ் திவாரி, “வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் பதிவை உருவாக்க வேண்டும். அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல், “போராட்டத்தின்போது கடந்த ஓராண்டில் உயிரிழந்த 700 விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி” மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை அளித்தார் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர்.
தொடர்ந்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., பினோய் விஸ்வம், ரவிக்குமார் எம்.பி. உள்ளிட்டோர் பல்வேறு விவகாரங்களை வலியுறுத்தி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்து உள்ளனர்.
கூட்டத்தொடருக்கு முன்னதாக நாடாளு மன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி
நாட்டின் வளர்ச்சிக்கான புதிய பாதை உருவாக்கப்பட வேண்டும். அதற்காக இந்த கூட்டத்தொடர் முக்கியமானதாகும். மிகமுக்கியமான கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அனைத்து பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக விவாதிக்க தயாராக உள்ளோம். ஆனால், நாடாளுமன்றத்தை அவமரியாதை செய்யாத வகையில் அமைதியான முறையில் விவாதங்கள் நடைபெற வேண்டும்.
எதிர்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. 150 கோடி டோஸ் தடுப்பூசி என்னும் இலக்கை நோக்கி முன்னேறி வருகிறோம். புதிய உருமாறிய கொரோனா ஒமிக்ரான் குறித்து நாம் அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அடுத்தாண்டு மார்ச் வரை இலவச ரேசன் பொருள் வழங்கப்படும் என கூறினார்.
முன்னதாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித் ஷா, விவசாய மந்திரி நரேந்திர சிங் தோமர், வர்த்தக மந்திரி பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட மூத்த அமைச்சரவை உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர தொடங்கிய சிறிது நேரத்தில் எதிர்க்கட்சிகள் 17 கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களவையில் முழக்கம் எழுப்பினர். சபாநாயகர் இருக்கியை முற்றுகையிட்டனர். இதை தொடர்ந்து மக்களவை இன்று நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.