மியான்மரில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகியின் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. ஆனால், பொதுத் தேர்தலில் வாக்காளர்களை மோசடி செய்ததாகக் கூறி இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
மறுமுனையில், தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெற்றதாக தேர்தல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதனை எல்லாம் பொருட்படுத்தாமல், மியான்மர் இராணுவம் அவரது ஆட்சியை கவிழ்த்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் தலைமையிலான சிவில் அரசாங்கம் கவிழ்ந்தது. மேலும், பிப்ரவரி மாதம் முதல் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
ஆங் சான் சூகியுடன் சேர்த்து மியான்மரின் முன்னாள் அதிபரும், ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கூட்டணியில் இருந்தவருமான வின் மைண்ட்க்கும் சிறை தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. மலேசிய சட்டமன்ற உறுப்பினரும் மனித உரிமைகளுக்கான ஆசியான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவருமான சார்லஸ் சாண்டியாகொ ‘நீதிக்கு எதிராக நடைபெறும் கேலிக்கூத்து இது’ என்று கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
76 வயதான ஆங் சான் சூகியின் மீது ஊழல் வழக்குகள், அலுவல் ரீதியான ரகசிய சட்டங்களை மீறுதல் உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மியான்மரின் தேசிய ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “ஆங் சான் சூகியை 104 ஆண்டுகள் சிறையில் அடைக்க இராணுவம் முடிவு செய்துள்ளது. அவர் சிறையில் வைத்து மரணம் அடைவதை அவர்கள் விரும்புகின்றனர்” என்று கூறியுள்ளார்.
இராணுவ ஆட்சிக்குழுவால் கைது செய்யப்பட்ட 10,600க்கும் மேற்பட்டவர்களில் ஆங் சான் சூகியும் ஒருவர் ஆவார். ஜனநாயகத்திற்கு ஆதரவான செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் போராட்டக்காரர்களை மியான்மர் இராணுவம் ஒடுக்கியது என்று அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.