Home உலகம் விபத்தில் சிக்கி தேவாலய பாடகர் குழுவினர் 23 பேர் பலி

விபத்தில் சிக்கி தேவாலய பாடகர் குழுவினர் 23 பேர் பலி

by Jey

கென்யா நாட்டில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்துக்கட்டியது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு தலைநகர் நைரோபியில் இருந்து 200 கி.மீ. தொலைவில், ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தேவாலயம் ஒன்றின் பாடகர் குழுவினர் ஒரு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.

அங்கு கிடுய் கவுண்டியில் உள்ள என்சியூ என்ற ஆற்றின் பாலத்தின் மீது வேகமாக ஓடிய வெள்ள நீரை பஸ் கடந்து செல்ல முயற்சித்தது. அப்போது அந்தப் பஸ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றில் கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் பயணித்தவர்கள் மரண ஓலமிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினரும், போலீசாரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த கோரவிபத்தில் 23 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. அவர்களில் 4 பேர் குழந்தைகள். 12 பேர் மட்டுமே பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பஸ்சை ஓட்டிய டிரைவருக்கு கிடுய் கவுண்டி சாலை பரிச்சயமில்லாமல் போனதும் விபத்துக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் பலியானவர்களுக்கு அந்த மாகாண கவர்னர் நகிலு அனுதாபம் தெரிவித்துள்ளார். பலியான 23 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு விட்டன.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றபோது விபத்தில் சிக்கி தேவாலய பாடகர் குழுவினர் 23 பேர் பலியானது அங்கு பெருத்த துயரத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

related posts