தமிழ்நாட்டில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், ஆவணங்களில் மாணவர்களின் பெயரை எழுதும்போது முன் எழுத்தையும் (இனிஷியல்) தமிழிலேயே எழுத வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு ஒரு அரசாணயை வெளியிட்டுள்ளது.
தமிழ் மொழியில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறை அமலுக்கு வரும் என்றும் இதை பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) அவர்கள், தமிழகத்தில் முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள் என அனைவரும் தமிழிலேயே கையொப்பம் இடவும், அதில் முன்னெழுத்துகளையும் தமிழிலேயே எழுத வேண்டும் என்றும் முன்னரே ஒரு அறிவிப்பை வெளியிட்டது நினைவிருக்கலாம்.
தமிழ் மொழியில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுதுவது குறித்து சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணை வெளியிடப்படும் நாளிலிருந்து இது நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழியின் (Tamil Language) வளர்ச்சிக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல வித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசானை, இதில் மற்றொரு பெரிய அம்சமாக பார்க்கப்படுகின்றது