திருச்சி சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அதன் மீதான விசாரணையில், நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழியை மீறி சாட்டை துரைமுருகன் ஒரு வார்த்தை பேசியிருந்தாலும் அவரது ஜாமீனை ரத்து செய்ய படும் எனவும், சாட்டை துரைமுருகன் என்ன பேசினார் என்பதை எழுத்துபூர்வமாக விரிவாக நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாட்டை துரைமுருகன் யூடியூபில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தும் அவதூறான கருத்துக்களை பேசியும் வீடியோ வெளியிட்டார். இதையடுத்து துரைமுருகன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இதனை
விசாரணை செய்த நீதிமன்றம் இனிமேல் இதுபோன்ற அவதூறுகளை பரப்ப மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் பெற்றுக் கொண்டு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில் சாட்டை துரைமுருகன், நீதிமன்றத்தில் அளித்த உறுதி மொழி உத்தரவாதத்தை மீறி தமிழக முதல்வர் குறித்து அவதூறுக பேசி வருகிறார் இதன்பேரில் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவே இவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் சாட்டை துரைமுருகன் என்பவர் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு அளித்த வாக்குறுதிகளையும் உறுதிமொழிப் பத்திரத்தையும் மீறி அவதூறாக பேசி வருகிறார் என்றும் அதற்கான ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதனை பார்த்த நீதிபதி புகழேந்தி கடும் கோபம் கொண்டு நீதிமன்றத்திற்கு வழங்கும் உறுதிமொழி பத்திரம் வெறும் பேப்பர் தானே என்று நினைக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, தமிழக முதல்வர் எவ்வளவு முடியுமோ அதை விட அதிகமாக தற்போது பணியாற்றி வருகிறார்; இதற்காக நீங்கள் ஒன்றும் பாராட்ட வேண்டாம்; ஆனால் மைக் கிடைத்தது என்பதற்காக கண்டதை எல்லாம் பேச முடியாது.
மேலும் சாட்டை துரைமுருகன் பேசியதெல்லாம் உட்கார்ந்து கேட்பதற்கு நீதிமன்றத்திற்கு நேரம் கிடையாது அரசு தரப்பில் அவர் என்ன பேசி உள்ளார் என்பதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யுங்கள் என்றார். அரசு மீது என்ன குற்றம் கண்டு விட்டீர்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, அரசு தரப்பு வழக்கறிஞர் சாட்டை துரைமுருகன் பேசியதை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஒரு வார்த்தை அவதூறாக தேவையில்லாமல் பேசி இருந்தால் நிச்சயமாக அவருக்கு வழங்கபட்ட ஜாமீன் ரத்து செய்யப்படும் என எச்சரித்து வழக்கு விசாரணை செவ்வாய் கிழமை ஒத்திவைத்தார்.