சீனாவின் உகான் மாகாணத்தில்தான் முதல்முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் சீன அரசு மேற்கொண்ட தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக அங்கு கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் சமீப காலமாக மீண்டும் டெல்டா உள்ளிட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசின் பாதிப்பு சீனாவில் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அங்கு 63 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. அந்த வகையில் 30 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 51 பேர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளாதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 99,604 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில், அங்கு இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,636 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.