ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டின் மத்திய வங்கியால் வெளியிடப்படும் ‘ஆப்கானி’ என்கிற பணம் புழக்கத்தில் உள்ளது. இந்தநிலையில் வரலாற்றில் இல்லா அளவுக்கு ஆப்கானிஸ்தானின் பண மதிப்பு பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அந்த நாட்டின் தேசிய வங்கியான `டா ஆப்கானிஸ்தான்’ வங்கி வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, திங்களன்று ஒரு அமெரிக்க டாலருக்கு 112.60 ஆப்கானி வர்த்தகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆப்கானி ஒரு டாலருக்கு சுமார் 76 ஆகவும், பின்னர் ஜூலையில் அது 81 ஆகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.
இந்த சூழலில் கடந்த ஆகஸ்டு மாத மத்தியில் தலீபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தனர். அப்போது ஒரு டாலருக்கு 90 ஆப்கானி வர்த்தகம் செய்யப்பட்டது. தலீபான்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் அந்த நாட்டுக்கு வழக்கப்பட்டு வந்த சர்வதேச நிதியுதவிகள் நிறுத்தப்பட்டதோடு, வெளிநாடுகளில் உள்ள ஆப்கானிஸ்தான் மத்திய வங்கிக்கு சொந்தமான சொத்துக்களும் முடக்கப்பட்டன.
இதனால் அந்த நாட்டின் பண வரவுகள் அனைத்து வறண்டுபோன நிலையில், அங்கு கடுமையான பெருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இந்த சூழலில் அந்த நாட்டின் பண மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.