சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் நகரில் ஹாஸ்வே பே என்ற இடத்தில் 38 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் அமைந்துள்ளது.
இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் உலக வர்த்தக மையத்தின் கிளை, உணவகங்கள் என பல்வேறு நிறுவனங்கள் அமைந்துள்ளன.
இந்நிலையில், அந்த 38 மாடி கட்டிடத்தில் இன்று நண்பகல் 12 மணியளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. கட்டிடத்திற்கு மின் இணைப்புகள் வழங்கும் ஒருங்கிணைந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென கட்டிடத்தின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதில், கட்டிடத்தில் இருந்த 300-க்கும் அதிகமானோர் சிக்கிக்கொண்டனர்.
இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 8 பேர் மூச்சுத்திணறலுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தீ விபத்து நடைபெற்ற அடுக்குமாடி கட்டிடத்தின் மேற்தளத்தில் 300- க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியிலும், கட்டிடத்தில் பற்றிய தீயை அணைக்கும் பணியிலும் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.