வட கொரியா ஒரு விநோதமான நாடு. அங்குள்ள மக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், என்ன ஆடை உடுத்த வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பதை அதன் சர்வாதிகாரி கின் ஜாங் உன் (Kim Jong Un) தான் நிர்ணயிக்கிறார். வட கொரியாவில் ஜனநாயகம் என்றால் கிலோ என்ன விலை என்ற கதை தான்.
அந்த வகையில், தென் கொரியாவை சேர்ந்த K-pop இசைக் குழுவின் வீடியோக்களைப் பார்த்தற்காகவும், அது தொடர்பான வீடோக்களை பகிர்ந்து கொண்டதற்காகவும், வட கொரியாவில் குறைந்தது 7 பேரையாவது பொது இடங்களில் பகிரங்கமாக தூக்கிலிட்டுள்ளது என்று ஒரு மனித உரிமை அமைப்பின் அறிக்கை மூலம் அதிர்ச்சியூட்டும் தக்வல் வெளியாகியுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un) ஆட்சியின் கீழ் வழங்கப்பட்ட மரணதண்டனைகள் குறித்து இடைக்கால நீதிப் பணிக்குழு கண்டறிந்ததாக நியூயார்க் டைம்ஸின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
இக்குழு 2015 முதல் மொத்தம் வட கொரியாவில் இருந்து வெளியேறிய 683 நபர்களிடம் நேர்காணல் நடத்தியது. மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு மக்கள் கொல்லப்பட்ட மற்றும் புதைக்கப்பட்ட இடங்களை அடையாளம் காண இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டது. இந்த 7 பேரில், ஆறு பேர் 2012 மற்றும் 2014 ஆண்டுகளுக்கு இடையில் ஹைசனில் கொல்லப்பட்டுள்ளனர்.
வட கொரியாவில் (North Korea) கிம் ஜாங் உன்னின் ஆட்சியின் கீழ் குறைந்தது 23 மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாக குழு மேலும் கண்டறிந்துள்ளது. இருப்பினும், உண்மையான எண்ணிக்கையைத் தீர்மானிப்பது மிகவும் கடினம் என்பதால் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம். இதில், மரண தண்டனைகள் அனைத்தும், குடும்பத்தினர் முன்னிலையில் நடத்தப்பட்டது எனவும் அறிக்கை மேலும் வெளிப்படுத்தியது.
2011 இல் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து, சர்வாதிகாரியான கிம் ஜாங் உன், தென் கொரிய பொழுதுபோக்கு அம்சங்கள், சினிமா, இசை போன்றவை வட கொரியர்களின் மனதை கெடுக்கும் என்று கூறி அதனை தடை விதித்தோடு பல சந்தர்ப்பங்களில் கடுமையான தண்டனைகளை விதித்துள்ளார்.