இளையதளபதி விஜய் மற்றும் சிம்ரன் நடிப்பில் 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இயக்குநராக அறிமுகமான எழிலுக்கு இது முதல் படம். விஜய்க்கு 21வது படம். இந்த திரைப்படம் விஜய்க்கு மட்டுமில்லாது, தமிழ் சினிமாவின் பெஸ்ட் காதல் திரைப்படங்கள் வரிசையிலும் இடம்பிடித்தது. லீட் ரோலில் நடித்த விஜய், சிம்ரனுக்கு தமிழக அரசின் விருதுகள் கிடைத்தது.
தமிழில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து 5 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. குறிப்பாக, கேரளாவில் ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடினர். அங்கு அவருக்கு தனி மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்த படமாகவும் இது மாறியது. இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் கசிந்துருகும் காதலைக் கொண்ட ‘மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னைத் தேடினேன்..’ ’இன்னிசை பாடி வரும்’ என்னும் பாடல்கள் இன்றும் பேவரெட் பாடலாக பலருக்கும் இருக்கிறது.
தமிழகத்தில் பல இடங்களில் நூறு நாட்களைக் கடந்து ஓடிய துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம், கேரளாவில் 125 நாளுக்கும் மேலாக ஓடி அசத்தியது. இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த விஜய்யின் தீவிர ரசிகர்கள், துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர். படம் வெளிவந்து 22 ஆண்டுகள் ஆனாலும், இப்போதைய டிரெண்டுக்கும் ஏற்ற காதல் படமாக இருப்பதால், டிசம்பர் 19 ஆம் தேதி இப்படத்தை கேரளாவில் ரீ ரிலீஸ் செய்கின்றனர். திருவனந்தபுரத்தில் உள்ள கலாபவன் தியேட்டரில் மாலை 7 மணிக்கு ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனை, நடிகை சிம்ரன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால், விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.