மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து கோவையில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை அரசிற்கு எடுத்து செல்லும் வகையில் நாடு முழுவதும் அகில இந்திய அளவிலான கூட்டமைப்பு சார்பில் இன்று ஒருநாள் கதவடைப்பு போராட்டம் நடந்தது.
கோவை மாவட்டத்தில் பாப்பநாயக்கன் பாளையம், சரவணம்பட்டி, பீளமேடு, வேலாண்டி பாளையம், ஆவாரம்பாளையம், தடாகம் ரோடு, துடியலூர், நரசிம்மநாயக்கன் பாளையம், கணபதி, சிட்கோ, மலுமிச்சம்பட்டி, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான சிறு தொழிற்சாலைகள் உள்ளன.
இங்கு இருசக்கர வாகனம் முதல் 6 சக்கர வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், பம்பு செட் மற்றும் மோட்டார் உற்பத்தி உதிரி பாகங்கள் தயாரிக்க கூடிய தொழிற்சாலைகள், ராணுவ தளவாடங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், கப்பலுக்கு தேவையான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரிஸ், வெட் கிரைண்டர் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டு காலமாக சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்களின் விலை விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோவையில் உள்ள 46 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன. இதனால் இன்று காலை முதலே கோவையில் உள்ள 50 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்தது. சிறு, குறு, நடுத்தர தொழிற்சங்கத்தினரின் இந்த போராட்டம் காரணமாக இன்று மட்டும் ரூ.1,500 கோடிக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.