ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் லோகநாதன் என்பவர் யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த போது இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அவரது மனைவியை மயங்கிய நிலையில், அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூட்டிச் சென்றுள்ளனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மகப்பேறு பார்ப்பது ஒரு சாகசம் என்பது போன்ற விஷமப் பிரச்சாரம் சமூக ஊடகங்களில் செய்யப்படுகிறது. அவற்றை மக்கள் நம்பக் கூடாது. இது தொடர்பாக தமிழ்நாடு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியட்டுள்ள பதிவில், ‘அரக்கோணம் பனப்பாக்கத்தில் இளம்பெண்ணுக்கு அவரது கணவர் யூ-ட்யூப் பார்த்து பிரசவம் பார்த்ததாகவும், அதில் குழந்தை இறந்ததுடன், தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் வெளியான செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.
மகப்பேறு என்பது மிகவும் சிக்கலான, சிறிய தவறு நடந்தாலும் தாய்க்கும், சேய்க்கும் உயிரிழப்பை ஏற்படுத்தி விடக் கூடிய விஷயமாகும். யூ-ட்யூபை பார்த்து கணவரே செய்வதற்கு அது ரசம் வைப்பதோ, நூடுல்ஸ் செய்வதோ அல்ல. மகப்பேறு விஷயத்தில் சாகச முயற்சிகள், விளையாட்டுகள் கூடாது.
நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு வலுவாக உள்ளது. 108 தொலைபேசியில் அழைத்தால் அவசர ஊர்தியில் வீட்டுக்கே வந்து பெண்ணை அழைத்துச் சென்று மகப்பேறு பார்த்து மீண்டும் வீட்டுக்கு கொண்டு வந்து விடும் வசதியை நான் மத்திய அமைச்சராக இருந்த போதே ஏற்படுத்தியுள்ளேன்.
மருத்துவமனையில் மகப்பேறு பார்த்துக் கொள்ளும் பெண்களுக்கு வேறு பல உதவிகளும் வழங்கப்படுகின்றன. அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவமனையில் மருத்துவர்களால் செய்யப்படும் மகப்பேறு தான் பாதுகாப்பானது என்பதை உணர வேண்டும்.
யூ-ட்யூப் மூலம் மகப்பேறு பார்ப்பது ஒரு சாகசம் என்பது போன்ற விஷமப் பிரச்சாரம் சமூக ஊடகங்களில் செய்யப்படுகிறது. அவற்றை மக்கள் நம்பக் கூடாது. இது தொடர்பாக தமிழ்நாடு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.