Home இலங்கை இலங்கை அதிகாரப்பகிர்வு முறை விசித்திரமானது – திலகராஜ்

இலங்கை அதிகாரப்பகிர்வு முறை விசித்திரமானது – திலகராஜ்

by Jey

பிரதேச செயலக அதிகரிப்பு சம்பந்தமாக ஒரே வர்த்தமானியில் வெளியான காலி மாவட்ட பிரதேச செயலகங்கள் நடைமுறைக்கு வந்துள்ளபோதும், நுவரெலிய மாவட்டத்தில் இன்னும் நடைமுறைக்கு வராமல் உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் இலங்கையில் அதிகாரபகிர்வு குறித்த விசித்திரமான நிலைப்பாட்டையே வெளிப்படுத்துவதாக உள்ளதாக முன்னாள் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பத்தி விக்ரமரட்ன, பேராசிரியர் ரொஹான் சமரஜீவ, கலாநிதி சுஜாதா கமகே, சட்டத்தரணி ஜாவிட் யூசுப் ஆகியோருடன் இணைந்து வளவாளராகக் கலந்து கொண்டு புதிய அரசியலமைப்பு முன்மொழிவுகள் குறித்த கலந்துரையாடலில் “இலஙலையில் அதிகாரப் பகிர்வு நடைமுறைகள் ” கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் இன்னும் புதிதாக சிந்தக்கப்படவில்லை. தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்புக்கு திருத்தத்தைச் செய்யும் யோசனைகளாகவே நாம் சிந்திக்கின்றோமே அன்றி புதிதாக ஒரு அரசியலமைப்பு குறித்த சிந்தனை இன்னும் எழவில்லை.

 

ஜனாதிபதி முறை வேண்டுமா இல்லையா என்பது பாராளுமன்ற தேர்தல் முறைமை எவ்வாறானதாக அமையப்போகிறது என்பதிலேயே தங்கியுள்ளது. பாராளுமன்ற முறைமை நடைமுறையில் இருந்த போதுதான் இந்திய தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. அதே நேரம் ஜனாதிபதி முறை வந்ததன் பின்னரே அவ்வாறு பறிக்கப்பட்ட குடியுரிமை மீளவும் கிடைக்கப்பெற்றது. இதனால் மலையகத் தமிழ் மக்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மலையகத் தமிழர்களான நாங்கள் வரவேற்றோம். ஆனால், இன்றைய நிலைமையில் எதேச்சதிகார நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆனால், அது பாராளுமன்ற தேர்தலில் எத்தகைய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதில் எவ்வாறு சமூகங்களின் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படுகின்றது என்பதிலேயே தங்கி உள்ளது.

ஏனெனில் இலங்கையில் அதிகார பகிர்வு விடயங்கள் மிகுந்த விசித்திரமான முறையில் இடம்பெறுவதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.

உதாரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களை சனத்தொகைக்கு ஏற்ப 5 ல் இருந்து 15 ஆக அதிகரிக்க வேண்டும் என நான் பாராளுமன்றில் பிரேரணை முன்வைத்தேன். அதே நேரம் அதற்கான வர்த்தமானி வெளியான போது காலி மாவட்டத்திற்கும் மேலதிக மூன்று செயலகங்கள் உருவாக்கப்பட்டு இருந்தது. காரணம் அந்த துறையின் அமைச்சர் காலி மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தார். இப்போது நடைமுறையைப் பார்த்தால் காலி மாவட்டத்திலே ஏற்கனவே இருந்த 21 பிரதேச செயலகத்துடன் மேலதிக மூன்று செயலகங்கள் நடைமுறையில் உள்ளது.

ஆனால் , நுவரெலியா மாவட்டத்தில் ஏற்கனவே இருந்த ஐந்து மாத்திரமே உள்ளது. பிரதேச செயலக அதிகரிப்பு சம்பந்தமாக ஒரே வர்த்தமானியில் வெளியான வெளியான, காலி மாவட்ட பிரதேச செயலகங்கள் நடைமுறைக்கு வந்துள்ள போதும் நுவரெலிய மாவட்டத்தில் இன்னும் நடைமுறைக்கு வராமை இலங்கையில் அதிகாரபகிர்வு குறித்த விசித்திரமான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இதுபோலத்தான் எல்லை மீள்நிரண்யம் குறித்த பிராமணங்களை வரையறுக்காது பிரதான இரண்டு கட்சிகளின் கட்டமைப்புக்கு ஏற்ப எல்லை மீள்நிர்ணயம் செய்யப்படுகிறது. பிராந்திய அபிவிருத்தியிலும் இதே பாகுபாடுதான் காட்டப்படுகிறது.

எனவே புதிய அரசியலமைப்பு புதிதான சிந்தனையில் உருவான ஒன்றாக அமையாதவரை இலங்கையில் அதிகார பகிர்வு விசித்திரமான ஒன்றாகவே அமையும் . இப்போதைய அதிகார பகிர்வு முறைமையை புரிந்து கொள்வது ஒன்றும் சிரமம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

related posts