வடக்கு மியான்மர் கச்சின் மாநிலத்தின் பகந்த் (Hpakant) என்ற இடத்தில் பச்சை மாணிக்க கற்களை வெட்டியெடுக்கும் சுரங்கப் பகுதியில்
நேற்று சுமார் 4 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் ஏறக்குறைய 80 பேருக்கு மேல் மாயமாகி உள்ளதாக மீட்புக் குழு உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர். காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. இதையடுத்து நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் காணாமல் போனவர்களை தேடுதல் மற்றும் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கி இறந்த 3 பேரின் உடல்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட 3 உடல்களும் ஆண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மர் நாட்டில் உலகின் மிகப்பெரிய சுரங்கங்கள் உள்ள நிலையில், அங்கு பல ஆண்டுகளாக ஏராளமான விபத்துக்கள் நிகழ்ந்து வருகின்றன. பகந்த் பகுதியிலும் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட மிகப்பெரும் நிலச்சரிவில் சிக்கி 174 பேர் உயிரிழந்தனர், 54 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.