கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சைக்கான மாத்திரையை அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம் உருவாக்கி இருந்தது.இந்த மாத்திரையின் அவசர பயன்பாட்டு அங்கீகாரத்துக்கு எப்.டி.ஏ. என்னும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் பைசர் நிறுவனம் கடந்த மாதம் விண்ணப்பித்து இருந்தது. ‘பேக்ஸ்லோவிட்’ என்னும் இந்த மாத்திரையானது லேசானது முதல் மிதமானது வரையிலான கொரோனா பாதிப்புக்கு நிவாரணம் அளிக்கும்.
வீட்டில் இருந்து சிகிச்சை பெறுகிற, அதிக ஆபத்துள்ள கொரோனா நோயாளிகளுக்கும் இந்த மாத்திரையை பரிந்துரைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த மாத்திரைக்கு நல்லதொரு செயல்திறன் இருப்பது பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது.
இதுபற்றி பைசர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் பூர்லா கூறும்போது, “இந்த மாத்திரை அங்கீகரிக்கப்பட்டால், உயிர்களைக் காப்பாற்றவும், ஆஸ்பத்திரியில் இருந்து கொரோனா நோயாளிகளை வெளியேற்றவும் உதவும் ஆற்றல் உள்ளது. இது கொரோனாவுக்கு எதிரான போரில், வாய்வழி வைரஸ் தடுப்பு சிகிச்சைகள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை கோடிட்டுக்காட்டுகிறது” என தெரிவித்தார்.
இந்த நிலையில் பைசர் நிறுவனத்தின் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா மாத்திரைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தற்போது அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தரப்பில் ,” ‘பேக்ஸ்லோவிட் மாத்திரையை 12 வயதுக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கோ அல்லது நோய் அறிகுறிகள் இருப்பவர்களுக்கோ கொடுக்கலாம்.அதில் வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் மற்றும் இதய நோய் உள்ளவர்களும் அடங்குவர். இதை கொடுப்பதற்கு தகுதியான குழந்தைகள் குறைந்தபட்சம் 40 கிலோ எடையுள்ளவர்களாக இருக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.