காலநிலை மாற்றம் ஆண்டுதோறும் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இந்த ஆண்டும் பல்வேறு நாடுகள் இயற்கையின் கோரத்தாண்டவத்துக்கு உள்ளாகின. தரவுகளின்படி, இயற்கை பேரழிவுகளால் ஆண்டுக்கு சராசரியாக 60 ஆயிரம் பேர் இறக்கின்றனர். உலகளாவிய ஒட்டுமொத்த இறப்பில், இது 0.1 விழுக்காடு ஆகும். 2021-ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய 5 இயற்கைச் சீற்றங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
கனடா வெப்பஅலை
கனடாவின் மேற்குப் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் கடுமையான வெப்ப அலை ஏற்பட்டது. இதனால், சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட பாதிப்புகளை அப்பகுதிகள் எதிர்கொண்டனர். 5 நாட்களில் 569 பேர் உயிரிழந்தனர். அந்தநேரத்தில் கொலம்பியா மாகாணம் முழுவதும் வெப்பநிலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருந்தது. இது குறித்து ஆய்வு செய்த ஆய்வாளர்கள், காலநிலை மாற்றமே இற்கு அடிப்படையான காரணம் எனத் தெரிவித்தனர்.
ஜெர்மனி வெள்ளம்
கடந்த ஜூலை மாதத்தில் வரலாறு காணாத வெள்ளத்தை ஜெர்மனி சந்தித்தது. பல பகுதிகள் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கான வெள்ளத்தை எதிர்கொண்டன. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டன. இயற்கையின் பேரழிவால் ஏற்பட்ட இந்த வெள்ளத்துக்கு 170க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். மின்சாரம், தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு, 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பெரும் பொருள் சேதத்தையும், பொருளாதார இழப்பையும் சந்தித்தனர்.
இத்தாலி காட்டுத் தீ
இத்தாலியில் சிசிலி நகரத்தையொட்டி இருக்கும் வனப்பகுதியில் கடுமையான வெப்பம் காரணமாக காட்டுத் தீ ஏற்பட்டது. ஜூலையில் பிடித்த தீயானது வனப்பகுதியில் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி ஆகஸ்ட் மாதம் வரை தொடர்ந்தது. இந்த தீயை அணைக்க சுமார் 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் இறக்கப்பட்டு, தீயை அணைக்கப் போராடினர். தீ விபத்தானது, அப்பகுதியில் நிலவிய கடுமையான வெயில் காரணமாக ஏற்பட்டதாக தெரிவித்த இத்தாலி அரசு, அந்த சமயத்தில் 48.8 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் கொளுத்தியாக விளக்கம் அளித்தது.
கிரீஸ் காட்டுத் தீ
இத்தாலியில் வனப்பகுதியை வேட்டையாடியதுபோலவே கிரீஸ் நாட்டிலும் காட்டுத் தீ, கோரத்தாண்டவம் ஆடியது. இயற்கையின் பேரழகும், அரிய பல மரங்களும் கொண்டிருக்கும் ஈவியா தீவில் தான் தீ காட்டுத் தீ ஏற்பட்டது. சுமார் 580க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர், உடனடியாக களத்திற்கு அனுப்பப்பட்டு தீயை அணைக்க போராடினர். இந்த விபத்தில் அந்த தீவில் இருக்கும் அரிய பல மரங்கள், செடிகள் தீக்கு இரையாகின. அங்கு வாழ்ந்த மக்கள் பலர் காயமடைந்தனர். காட்டின் பெரும் பகுதி தீக்கு இரையானது.
அமெரிக்க புயல்
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியை கடந்த ஆகஸ்ட் மாதம் ஐடா புயல் தாக்கியது. அமெரிக்க கண்டத்தை தாக்கிய மிகப்பெரிய புயல்களுள் ஒன்றான இந்தப் புயலுக்கு சுமார் 45 பேர் வரை இறந்தனர். பல கட்டடங்கள் சூறாவளிக் காற்றில் சிக்கி சிதைந்தன. மிசிசிப்பியில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். இதேநிலை நியூ ஆர்லியன்ஸ் நகரத்திலும் நிலவியது.