தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு மற்றும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய துணிப்பை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. 1 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரம் பேர் பயன் பெறக்கூடிய இத்திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.1,088 கோடியே 17 லட்சத்து 70 ஆயிரம் நிதி ஒதுக்கி உள்ளது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.505 மதிப்புள்ள பொங்கல் பொருட்களுடன் மளிகை பொருட்களும் சேர்த்து வழங்கப்பட உள்ளன. அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு பாக்கெட்டுகளாக அடைக்கப்பட்டுள்ளன. இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ள நெய் ‘ஆவின்’ நிர்வாகத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 3-ந் தேதி தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து 4-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன.
பொங்கல் தொகுப்பு பொதுமக்களுக்கு நெரிசல் இல்லாமல் வழங்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொருட்களை வினியோகிக்க வேண்டும் என்றும், அனைத்து ரேஷன் கடை பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன.
அவர்களை ஒவ்வொரு நாட்களில் நேரத்தை குறிப்பிட்டு பொங்கல் பரிசு பொருட்களை பெறுவதற்கு வரவழைக்க டோக்கன் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. தினமும் 200 குடும்ப அட்டைகள் வீதம் பொருட்கள் வழங்க வேண்டும் என்று கடை ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலையில் 100 பேருக்கும், மாலையில் 100 பேருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்படும். பொதுமக்களை சமூக இடைவெளி, கிருமி நாசினி, முககவசம் போன்றவற்றை கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும் எனவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதனையடுத்து வீடு வீடாக டோக்கன் கொடுக்கும் பணி இன்று முதல் தொடங்கி உள்ளது. இன்று முதல் 3-ந் தேதி வரை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு பெறும் நாள், நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வினியோகிக்கப்படுகிறது.
பொங்கல் பரிசு பொருளை பெறுவதற்கு பொதுமக்களின் கைரேகை பதிவு கட்டாயம் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. அதனால் அந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் ரேஷன் அட்டையை காண்பித்து கையொப்பமிட்டு பொருட்களை பெற்று கொள்ள வேண்டும்.
தமிழகம் முழுவதும் 33 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. சென்னையில் 1,300 கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வினியோகிக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.
வருகிற 4-ந்தேதி முதல் 10-ந்தேதிவரை பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்படுகிறது. இந்த நாட்களில் வெளியூர் சென்று இருந்தாலும் அவர்கள் பின்னர் பெற்று கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகிக்கும் பணி சென்னையில் இன்று முதல் தொடங்கி உள்ளது. அரசு அறிவித்துள்ளபடி பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நெரிசலின்றி குறிப்பிட்ட நேரத்தில் பொருட்களை வாங்கி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக வெள்ளிக்கிழமை ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். டோக்கன் வினியோகிக்கும் பணி தற்போது தொடங்கி உள்ளதால் நாளை வேலை நாளாக மாற்றப்படுமா? என்பது குறித்து இன்று மாலைக்குள் தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.