தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் இயக்குனராக பன்முகத்தன்மை கொண்டவர் சமுத்திரகனி. இவரின் படங்கள் அதிகமாக சமூக நீதிகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலேயே அமைந்திருக்கும். நேர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் ‘ரஜினிமுருகன்’ படத்தின் மூலம் எதிர்மறை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். சமீபத்தில் இவர் இயக்கி தம்பி ராமையா நடித்த வினோதய சித்தம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இவரது மகன் ஹரி விக்னேஷ்வரன் குறும்படம் ஒன்றை இயக்கியும், நடித்தும் உள்ளார். “அறியா திசைகள்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படமானது 40 நிமிடங்கள் கால அளவை கொண்டுள்ளது. இக்குறும்படம் குறித்து சமுத்திரகனியின் மகனும், இயக்குனருமான ஹரி விக்னேஷ்வரன் கூறுகையில், வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞன் எப்படி ஏமாற்றப்பட்டு அறியா திசைகளில் பயணிக்கிறான் என்பதே இந்த குறும்படத்தின் கதை என்று கூறியுள்ளார். இந்த குறும்படத்தில் இளைஞனாக நடிகர் – இயக்குனருமான சமுத்திரக்கனியின் மகன் ஹரி விக்னேஷ்வரன் நடித்து இந்த குறும்படத்தை எழுதி இயக்கி உள்ளார். மிகவும் புத்திசாலித்தனமான கதை களத்துடன் அமைந்துள்ளது. மேலும் இதற்கு இசை கூடுதல் பலம் சேர்க்கிறது.
இந்த “அறியா திசைகள்” குறும்படம் பலரின் பாராட்டுகளைப் பெற்றதுடன் சமூகவலைத்தளங்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இதன் மூலம் ஹரி விக்னேஷ்வரன் தனது அப்பா சமுத்திரகனியை போலவே திரைத்துறையில் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடித்து இருந்த RRR திரைப்படம் கொரோனா தொற்று காரணமாக மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.