சீனாவின் வடகிழக்கு பகுதியில் லியோனிங் மாகாணத்தில் அமைந்துள்ள துறைமுக நகரம் டேலியன். இந்த நகரில் பிரபலமான சந்தை ஒன்று உள்ளது. இந்த சந்தையில் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.
அந்த வகையில் நேற்று முன்தினம் காலை இந்த சந்தை வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. ஏராளமான மக்கள் அங்கு திரண்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர்.
அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் சந்தையில் திடீரென தீப்பிடித்து. சந்தைக்கு கீழே நிலத்துக்கு அடியில் இருந்து தீ பரவியதாக கூறப்படுகிறது. மளமளவென பற்றி எரிந்த தீ கண்இமைக்கும் நேரத்தில் சந்தை முழுவதிலும் பரவியது.
இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. சந்தையில் இருந்த மக்கள் அனைவரும் உயிர் பயத்தில் அலறியடித்துக் கொண்டு அங்கும், இங்குமாக ஓட்டம் பிடித்தனர்.
இதற்கிடையில் இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
ஆனால் காற்றின் வேகம் காரணமாக தீ மேலும், மேலும் பரவியதால் தீயை அணைப்பது தீயணைப்பு வீரர்களுக்கு சவாலாக இருந்தது. எனினும் சுமார் 3 மணி நேரம் போராட்டத்துக்கு பின் தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் இந்த விபத்தில் தீயின் கோரப்பிடியில் சிக்கி தீயணைப்பு வீரர் ஒருவர் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் 5 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரிய வராத நிலையில், இது குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.