இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,007 பேர் குணமடைந்துள்ளனர். 124 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,46,70,18,464 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மொத்தமாக இதுவரை 4,82,017 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பஞ்சாப்பில் பாட்டியாலா அரசு மருத்துவ கல்லூரியில் 100 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அப்பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பொறியியல் கல்லூரி ஒன்றில் 93 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இன்று அரசு மருத்துவ கல்லூரியில் 100 மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் மூட பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது. பஞ்சாபில் கடந்த 4 வாரங்களில் 300 சதவீத கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 மருத்துவ மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, ஹாஸ்டலில் தங்கியிருந்து படித்து வரும் மாணவர்கள் உடனடியாக தங்களின் அறைகளை விட்டு காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது போல பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நாலந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சில மருத்துவர்களுக்கு அறிகுறி தென்பட்டதால், கடந்த ஜனவரி 2-ம் தேதியன்று 194 மருத்துவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 84 மருத்துவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என நேற்று முடிவு வந்தது. இன்று மேலும் 72 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது தெரியவந்துள்ளது.
மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது மருத்துவத்துறையினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.