”காற்றுப் போன பலுானாக கவர்னர் உரை உள்ளது. கவர்னர் உரை என்ற பெயரில், தங்கள் முதுகை தாங்களே தட்டிக் கொடுத்துள்ளனர்,” என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசினார்.
சட்டசபையில் அவர் பேசியதாவது:பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்க 2019ம் ஆண்டே தடை உத்தரவு நடைமுறைப் படுத்தப்பட்டது. பிளாஸ்டிக்கை ஒழித்தால் மட்டுமே விவசாயம் செழிக்கும். பிளாஸ்டிக் தேங்குவதால், வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது.
அ.தி.மு.க., அரசு கொண்டு வந்த திட்டத்தை, தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
மேட்டூர் உபரி நீரை, சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 ஏரிகளுக்கு திருப்பும் திட்ட பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுஉள்ளது. அதை தீவிரப்படுத்த வேண்டும்.
அடுத்த ஆண்டாவது, மேட்டூர் உபரி நீரை வறண்ட 100 ஏரிகளில் நிரப்ப வேண்டும். திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள் பயன் பெறும் காவிரி – குண்டாறு திட்டத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவதற்காக சென்ற ஓமலுார் எம்.எல்.ஏ., மணியை, போலீஸ் மற்றும் கூட்டுறவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். தொகுதியில் நடந்த விழாவில் பங்கேற்க சென்ற, முன்னாள் அமைச்சர் ஜெயராமன் தடுக்கப்பட்டுள்ளார்.
எம்.எல்.ஏ.,க்களை பணி செய்யவிடாமல் தடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவர்னர் உரையை தயாரித்த அரசிடம், புதிய செயல் திட்டங்களோ, மக்கள் நலத் திட்டங்களோ இல்லை. காற்று போன பலுான் போல, கவர்னர் உரை சுருங்கிஉள்ளது. இந்த அரசு, ஒரு கட்சி அரசாக இல்லாமல், மக்களின் அரசாக இருக்கும் என்று கூறப்பட்டது.
ஆனால், எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிக்கு செல்வதற்கு, போலீசார் முட்டுக்கட்டை போடுகின்றனர். கவர்னர் உரை வாயிலாக தங்கள் முதுகை, தாங்களே தட்டிக் கொடுத்துள்ளனர். நலத் திட்டங்களை எதிர்பார்க்கும் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
கவர்னர் உரை கானல் நீராக மாறியுள்ளது.
கவர்னர் உரை என்ற பெயரில், ஓட்டளித்த மக்களின் தலையில் வாசம் இல்லாத காகித பூவை அரசு சூட்டியுள்ளது.இவ்வாறு பழனிசாமி பேசினார்.அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பான புகார், தன் பரிசீலனையில் இருப்பதாக கூறினார்.