சென்னையில் கொரோனா தொற்று பாதித்த நபர்களை அழைத்து செல்வதற்காக, 42 சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை, முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்று பாதித்தவர்களை, அவர்களின் இருப்பிடங்களில் இருந்து, முதற்கட்ட உடற்பரிசோதனை மையங்களுக்கு அனுப்ப வேண்டும். பரிசோதனைக்கு பின், பாதுகாப்பு மையம், சிகிச்சை மையம் அல்லது மருத்துவமனைகளுக்கும் அழைத்து செல்ல, 250 கார் ஆம்புலன்ஸ் வாகனங்கள், கடந்த ஆண்டு மே 12ல் பயன்பாட்டிற்கு வந்தன.
இத்திட்டம் அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டது.
முதல்வர்களுடனான ஆய்வு கூட்டத்தில், இத்திட்டத்தை செயல்படுத்தியதற்காக, தமிழக அரசுக்கும், முதல்வருக்கும், பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
இந்த திட்டத்தை விரிவுப்படுத்தும் வகையில், கொரோனா தொற்று பாதித்த நபர்களை அழைத்து செல்ல, 42 சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை, தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
ஒவ்வொரு வாகனத்திலும், ஒரு டிரைவர், ஒரு கொரோனா களப்பணியாளர், கவச உடை அணிந்து பணியில் ஈடுபடுவர்.
இவர்கள் கொரோனா பாதித்தவர்களை, அவர்களின் இருப்பிடங்களில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வர். இந்த வாகனத்தில், தொற்று பாதிக்கப்பட்டவர்களால், டிரைவர் மற்றும் கொரோனா களப்பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேவையை பெற, 1913 என்ற கட்டணமில்லா எண்ணிற்கும், 044 – 2538 4520, 4612 2300 என்ற தொலைபேசி எண்களிலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நேரு, பொன்முடி, சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.