ஆப்கானிஸ்தானில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் ஒன்பது குழந்தைகள் உயிரிழந்தனர் நான்கு பேர் காயமடைந்தனர்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான் பயங்கரவாத அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள நாகர்ஹர் மாகாணத்தின் லாலோபர் மாவட்டத்தில், தானியங்களுடன் மாட்டு வண்டி நேற்று சென்றது. அந்த பாதையில் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி மாட்டு வண்டியின் சக்கரத்தில் பட்டு வெடித்துச் சிதறியது.
இந்த குண்டுவெடிப்பில் ஒன்பது குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.