Home இந்தியா மீன்வளத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட மீனவர்கள்

மீன்வளத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட மீனவர்கள்

by Jey

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு அங்கு சிறையில் வாடும் 43 மீனவர்களையும், அவர்களின் ஆறு படகுகளையும் பொங்கலுக்கு முன் விடுவிக்க வலியுறுத்தி மீனவர்களின் குடும்பத்தினர் ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக டிச.19ல் ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர், ஆறு படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். அடுத்த நாள் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.

மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையால் ராமேஸ்வரம், மண்டபத்தை சேர்ந்த 12 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு இந்திய துாதரகம் மூலம் ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்ற மீனவர்களையும் பொங்கலுக்கு முன் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் தங்கச்சிமடம் மீனவர்களின் குடும்பத்தினர் நேற்று காலை ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கைது செய்யப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் விடுவிக்கப்படாததால் பொங்கலுக்கு முன் விடுவிக்க கண்ணீருடன் வலியுறுத்திய பெண்களிடம் மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் பேச்சுவார்த்தை நடத்தினார்.ஜன.13ல் வாய்தா உள்ளதால் அன்றைய தினம் விடுவிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதற்கு முன் மீனவர்களை குடும்பத்தினருடன் நாளை(இன்று) பேச வைப்பதாகவும் உறுதி அளித்தார்.

related posts