அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி மீது 3 கோடி ரூபாய் பணமோசடி புகார் எழுந்தது. இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவான அவரை பிடிக்க தமிழக காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். உயர்நீதிமன்றம் முன்ஜாமின் மனுவை ரத்து செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி ஜாமின்கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வரும் வரை தலைமறைவாக இருக்க எண்ணிய அவரை, கடந்த 5 ஆம் தேதி தமிழக காவல்துறையினர் கைது செய்தனர்.
கர்நாடகாவில் காரில் சென்று கொண்டிருந்த ராஜேந்திர பாலாஜியை சிறப்பு படையினர் கைது செய்து தமிழகம் அழைத்து வந்தனர். அவர் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமின் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்ட விதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், அவரின் உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்களை ஏன் துன்புறுத்தினீர்கள்? என்றும் கேள்வி எழுப்பியது.
இதற்கு பதில் அளித்த தமிழக அரசு, முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு அவருக்கு முறையாக சம்மன் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அவர் உடனடியாக தலைமறைவானதாகவும் தெரிவித்தது. மேலும், தலைமறைவாக இருக்கும் நபர் ஜாமீன்கோரி எப்படி உச்சநீதிமன்றத்தை நாட முடியும்? என்றும் தமிழக அரசு பதில் கேள்வி எழுப்பியது. இந்த விவகாரத்தில் நீதிபதிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படக்கூடாது என தங்களின் ஆட்சேபனையையும் தமிழக அரசு பதிவு செய்தது. இதனையடுத்து ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் 4 வார காலத்திற்கு இடைக்கால ஜாமினை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அவர் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், வெளியூர்களுக்கு செல்லக்கூடாது, காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.