தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பால், வரும் 31ம் திகதி வரை மாநிலம் முழுதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து, அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதன்படி, ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ‘ஆன்லைன்’ வகுப்புகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், கல்லுாரிகளுக்கு 20ம் திகதி வரை அறிவிக்கப்பட்ட விடுமுறை, 31ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வுகள் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டதால், மாணவர்கள் வீட்டில் இருந்து தேர்வுக்கு தயாராகும் வகையில், 31ம் திகதி வரையிலும் விடுமுறை தொடர்வதாக, கல்லுாரிகளில் இருந்து மாணவர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. மருத்துவம் மற்றும் மருத்துவ இணை படிப்புகளுக்கான கல்லுாரிகளில் மட்டும், வழக்கம் போல வகுப்புகளை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.