தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதனால், பரவல் விகித்தத்தைக் குறைக்கும் வகையில் தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்நிலையில், தைப்பொங்கலையொட்டி சேலம் மாவட்டம், எடப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் எருதாட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், புதுப்பாளையம், மாணிக்கம்பட்டி, வெள்ளாலபுரம், சித்தரம்பாளையம், சின்னப்பம்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த தர்மகர்த்தா மற்றும் ஊர் பெரியோர்கள் கலந்து கொண்டனர். அப்போது, எருதாட்டத்திற்கு அனுமதி வேண்டும் என வட்டாட்சியரிடம் கோரினர். ஆனால், கொரோனா பரவல் மற்றும் பாதிப்பு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு எருதாட்டத்திற்கு தடை விதிப்பதாக வட்டாட்சியர் அறிவித்தார்.
தடை குறித்து வட்டாட்சியர் கூறிய காரணத்தையும் கிராம நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டனர். மேலும், அரசு கொடுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பதாகவும் அறிவித்தனர். தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பை கருத்தில் கொண்டு, கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, பொங்கலன்று வழிபாட்டு தலங்களில் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.