ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் பார்லிமென்ட் தலைவர் டேவிட் சசோலி, 65, உடல் நலக் குறைவால் காலமானார்.
இத்தாலியைச் சேர்ந்த பத்திரிகையாளரான டேவிட் சசோலி, பொதுச் சேவையில் உள்ள ஆர்வம் காரணமாக தீவிர அரசியலில் ஈடுபட்டு புகழ் பெற்றார்.
கடந்த 2019ல் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் பார்லிமென்ட் தலைவராக பொறுப்பேற்றார். இரண்டரை ஆண்டு கால தலைமையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்த பெருமைக்கு உரியவர்.
மத்திய தரைக் கடல் பகுதி வழியாக சட்ட விரோதமாக குடியேற முயன்று உயிரிழக்கும் அகதிகள் பிரச்னையை தீர்க்க தீவிர முயற்சி செய்தார். கடந்த ஆண்டு செப்.,ல் நுரையீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இருந்த போதிலும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் தலைமைப் பொறுப்பை தொடர்ந்து வகித்து வந்தார்.டிசம்பரில் டேவிட் சசோலியின் உடலில் நோய் எதிர்ப்பு திறன் குறைந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த டேவிட் சசோலி, நேற்று மரணம் அடைந்தார்.