‘ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமில்லாத உறுப்பினராக, இரண்டாவது ஆண்டில், சர்வதேச பாதுகாப்பு தொடர்பான நம் முன்னுரிமைகளை ஒருங்கிணைப்பது மற்றும் வலுவூட்டுவதை மேற்கொள்வோம்’ என, ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் டி.எஸ். திருமூர்த்தி கூறியுள்ளார்.
ஐ.நா., சபையில் மிகவும் முக்கிய அமைப்பாக பாதுகாப்பு கவுன்சில் உள்ளது. மொத்தம், 15 நாடுகளை உறுப்பினர்களாக உடைய இந்த அமைப்பின், நிரந்தரமில்லாத உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.முன்னுரிமைகடந்தாண்டு, ஜன.,ல் துவங்கிய இந்த நியமனம், வரும் டிசம்பரில் முடிகிறது. இந்தியா இவ்வாறு எட்டாவது முறையாக உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளது.
தற்போது முதல் ஆண்டு பதவிக்காலம் முடிந்துள்ள நிலையில், ஐ.நா.,வுக்கான இந்தியத் துாதர் டி.எஸ்.திருமூர்த்தி கூறியதாவது:முதல் ஆண்டில், நம்முடைய முன்னுரிமைகளை மிகவும் உறுதியாகவும், ஆக்கப்பூர்வமாகவும் உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தினோம்.
தற்போது இரண்டாவது ஆண்டில், இந்த முன்னுரிமைகள் செயல்பாட்டுக்கு வருவதை உறுதி செய்யும் வகையில், அவற்றை ஒருங்கிணைக்க மற்றும் வலுவூட்ட உள்ளோம்.முதல் ஆண்டில், கடந்த, ஆக.,ல், இந்தியா கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்றது. இரண்டாவது ஆண்டில், வரும், டிச.,ல் மீண்டும் தலைமைப் பொறுப்பு நமக்கு கிடைக்க உள்ளது.
முதல் ஆண்டில், கடல்சார் பாதுகாப்பு, ஐ.நா., அமைதி படை, பயங்கரவாதம் போன்ற பல முக்கிய பிரச்னைகளை முன்னிறுத்தினோம். இரண்டாவது ஆண்டில், இவற்றை மேலும் விரிவுபடுத்தி, வேகப்படுத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.நா.,வின் சிறுபான்மையினர் விவகாரத்துக்கான சிறப்பு பிரதிநிதியான டாக்டர் பெர்னான்ட் டீவரேனஸ், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: இந்தியாவில், சிறுபான்மையினரான முஸ்லிம் பெண்களை ஏலம் விடும், ‘சல்லி டீல்ஸ்’ என்ற சமூக வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது போன்றவற்றை துவக்கத்திலேயே களைய வேண்டும். அதுபோல், வெறுப்பு பேச்சு போன்றவற்றையும் தவிர்க்க, தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்க