ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறியும், உலக நாடுகளின் எதிர்ப்புகளை கண்டுகொள்ளாமலும் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதித்து அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.
அந்த வகையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஒலியை விட 5 மடங்கு வேகமாக பாய்ந்துசெல்கிற ஹைபர் சோனிக் ஏவுகணை சோதனையை அந்த நாடு நடத்தியது. இந்த ஏவுகணை சோதனையை வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் நேரில் பார்த்தார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஏவுகணை சோதனையானது நாட்டின் அணுசக்தி போர்த்தடுப்பு சக்தியை பெரிதும் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டதாக தகவல்கள் வெளிவந்தன.இந்த சோதனையை வடகொரியா நடத்தி இருப்பது அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்ததால் உடனடியாக அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.
இந்த ஏவுகணை சோதனையில் தொடர்புடைய வடகொரியாவின் 5 மூத்த அதிகாரிகள் மீது ஜோ பைடன் நிர்வாகம் பொருளாதார தடை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது.
வட கொரியாவின் ஏவுகணை திட்டங்களுக்கான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பெறுவதில் அவர்கள் ஆற்றிய பங்குக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நிதித்துறை கூறுகிறது. இதே போன்று வட கொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் நடவடிக்கை எடுப்பதற்கு அமெரிக்கா முன்மொழியும் என்று ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்பீல்டு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ள வடகொரிய அதிகாரிகள் 5 பேரில் ஒருவர் ரஷியாவில் உள்ளார், மற்ற 4 பேரும் சீனாவில் உள்ளார்கள் என தகவல்கள் கூறுகின்றன.
அமெரிக்க அதிகார வரம்புக்குள் இருக்கிற இந்த 5 பேரின் சொத்துக்களும் முடக்கப்படுகின்றன. அவர்கள் அமெரிக்காவில் தொழில் செய்ய முடியாது. அத்துடன் அவர்களுடன் வர்த்தக தொடர்பு வைத்துக்கொள்ளுகிற தனிநபர்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் நடவடிக்கை பாயும் என்பது குறிப்பிடத்தக்கது.