இந்த மாதம் அடுத்தடுத்து மூன்று முறை ஏவுகணை சோதனைகளை நடத்திய வட கொரியா, நேற்று மீண்டும் இரண்டு ஏவுகணைகளின் சோதனையை நடத்தியுள்ளது.
கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த வட கொரியா இம்மாதம் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை, ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லும் ‘ஹைபர்சோனிக்’ ஏவுகணை ஆகியவற்றின் சோதனைகளை நடத்தியது. மேலும், ரயிலில் இருந்து குறுகிய துாரம் சென்று தாக்கும் ஏவுகணைச் சோதனையையும் நடத்தியது.
இந்நிலையில் வட கொரியா நேற்று பியாங்யங் விமான நிலையம் அருகே சுனன் பகுதியில் இருந்து குறுகிய துாரம் சென்று தாக்கும் இரு ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது. இந்த சோதனை வெற்றி பெற்றதா என்ற விபரம் வெளியாகவில்லை.வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருவதற்கு, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் கண்டம் தெரிவித்துள்ளன. வட கொரியா அணு ஆயுத தயாரிப்பை கைவிட வலியுறுத்தி அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
அணு ஆயுத தயாரிப்பை முழுமையாக கைவிட்டால் தடையை நீக்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால் தடையை முதலில் நீக்கினால் பேச்சு நடத்த தயாராக உள்ளதாக வட கொரியா தெரிவித்து வருகிறது. இதை அமெரிக்கா ஏற்க மறுத்து விட்டது. இதனால் அமெரிக்க ஆதரவு நாடுகளான தென் கொரியா, ஜப்பானை அச்சுறுத்தும் வகையில், தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏவுகணை தொழில்நுட்பங்களை கையாளும் வட கொரிய அதிகாரிகள் ஐந்து பேருக்கு, அமெரிக்கா கடந்த வாரம் தடை விதித்தது. இது தவிர, மேலும் இருவருக்கும், ரஷ்ய ஆயுத நிறுவனம் ஒன்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.