தாராபுரம் அமராவதி ஆற்றில் குளித்தபோது, புதைமணலில் சிக்கி திருப்பூரை சேர்ந்த பள்ளி மாணவர்கள் உட்பட, ஆறு பேர் பலியாகினர்.
திருப்பூர், இடுவாய், அண்ணாமலை கார்டனை சேர்ந்த, 30 பேர், திண்டுக்கல் மாவட்டம் மாம்பாறை, முனியப்பன் கோவிலுக்கு கிடா வெட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர்.அங்கிருந்து, திருப்பூருக்கு கார் மற்றும் வேனில் நேற்று திரும்பினர். மாலை 4:00 மணிக்கு, தாராபுரம் அருகே, பைபாஸ் சாலையை ஒட்டி, அமராவதி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது, அபாயகரமான புதைமணல் பகுதியில் குளித்துக்கொண்டிருந்தபோது, சிலர் திடீரென புதைமணலில் சிக்கினர்.
அவர்கள் கூச்சலிட்டதை கேட்டு, அப்பகுதியில் இருந்த சிலர் மூழ்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், மீட்பு முயற்சி தோல்வி அடைந்ததால், ஒரே குடும்பத்தை சேர்ந்த, சகோதரர்கள் ரஞ்சித், 19 – ஸ்ரீதர், 17 மற்றொரு சகோதரர்கள் யுவன்,17 – மோகன், 18 மற்றும் சக்ரவர்மன், 18; அமிர்தகிருஷ்ணன், 17, என ஆறு பேர் பலியாகினர். இதில் ரஞ்சித் மட்டும் கல்லுாரி மாணவர்; மற்ற அனைவரும், பள்ளி மாணவர்கள். தாராபுரம் தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி, ஆறு பேரின் உடல்களையும் மீட்டனர்.
அமராவதி ஆற்றில் புதைமணல் உள்ள பகுதி குறித்து, எச்சரிக்கும் பலகை இருந்தது. ஆனால், புதிய பாலம் கட்டுமான பணியின் போது, பலகை அகற்றப்பட்டது. இதனால், வெளியூரை சேர்ந்தவர்கள் ஆற்றில் இறங்கி குளிக்கும்போது, புதை மணல் இருப்பது தெரியாமல் சிக்கி விடுகின்றனர். இதே இடத்தில் ஏற்கனவே, 10க்கும் மேற்பட்டோர் புதை மணலில் சிக்கி பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.