தமிழகத்தில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக, இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.
அதன்படி, சென்னை மாநகராட்சி மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சிகள், எஸ்.சி., பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஆவடி மாநகராட்சி எஸ்.சி., பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
கடலுார், திண்டுக்கல், வேலுார், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய மாநகராட்சிகள், பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.இதேபோல, கொடைக்கானல், தாராபுரம், நாமக்கல், மானாமதுரை, நரசிங்கபுரம், புஞ்சை புளியம்பட்டி, ஒட்டன்சத்திரம், ஜெயங்கொண்டம், திட்டக்குடி, உளுந்துார்பேட்டை நகராட்சிகளின் தலைவர் பதவிகள், எஸ்.சி., பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
ஜோலார்பேட்டை, துறையூர், களக்காடு, மாங்காடு, கூடலுார், மேட்டூர், திருப்பத்துார், திருவள்ளூர், பொன்னேரி நகராட்சி தலைவர் பதவிகள், எஸ்.சி., பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. நெல்லியாளம் நகராட்சி தலைவர் பதவி எஸ்.டி., பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை, கூத்தாநல்லுார், அதிராமபட்டினம், ராசிபுரம், குன்னுார், திருவாரூர், ஊட்டி, முசிறி, திருத்துறைப்பூண்டி. செங்கோட்டை, பள்ளப்பட்டி, வாலாஜாபேட்டை, நெல்லிகுப்பம், பேர்ணாம்பட்டு, சீர்காழி உள்ளிட்ட 58 நகராட்சி தலைவர் பதவிகள், பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.இதேபோல, சோளூர், தேவர்சோலா பேரூராட்சி தலைவர் பதவிகள், எஸ்.டி., பிரிவு பெண்களுக்கும், கிள்ளை பேரூராட்சி எஸ்.டி., பொது பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசூர், மருதுார், வாலாஜாபாத், தலைஞாயிறு உள்ளிட்ட 43 பேரூராட்சி தலைவர் பதவிகள், எஸ்.சி., பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. செந்தாரப்பட்டி, நடுவட்டம், கோம்பை, அரும்பாவூர் உள்ளிட்ட 42 பேரூராட்சி தலைவர் பதவிகள், எஸ்.சி., பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவினாசி, வல்லம், அய்யம்பேட்டை, சோழபுரம் உள்ளிட்ட 200 பேரூராட்சி தலைவர் பதவிகள், பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.