அபுதாபியில் ‘ஆயில் டேங்கர்’ மற்றும் விமான நிலையம் மீது ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்திற்கு தேவையான உதவிகள் செய்யத் தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடன ஐக்கிய அரபு எமிரேட்சின் தலைநகரமான அபு தாபியில் பெட்ரோல் சேகரித்து வைக்கப்படும் ‘ஆயில் டேங்கர்’ கள் மீது ஆளில்லா குட்டி விமானங்களை ஏவி நேற்று முன்தினம் வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அபுதாபி சர்வதேச விமான நிலையத்திலும் இதே முறையில் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களில் இந்தியர்கள் இருவரும், பாக்.,ஐச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த ஆறு பேரில் இந்தியர்கள் இருவர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கான இந்திய துாதர் சஞ்சய் சுதிர் கூறும்போது,” உயிரிழந்த இந்தியர்கள் இருவர் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. ”அவர்களது குடும்பத்தினருக்கு தேவைப்படும் உதவிகள் செய்யப்படும்,” என்றார்.எனினும் அவர், இறந்த இருவரின் பெயர்களை வெளியிடவில்லை.