உலகளவில், 230 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்க, எங்களுக்கு அதிக வரி விதியுங்கள்’ என, 100 கோடீஸ்வரர்கள் நுாதன கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐரோப்பாவின் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில், உலக பொருளாதார மாநாடு நடக்கிறது. இதில் நேற்று சர்வதேச தொழிலதிபர்கள் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பேசினர். அப்போது, 102 கோடீஸ்வரர்கள் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:உலகை கொரோனா வைரஸ் ஆட்டிப் படைத்த இரு ஆண்டுகளில், 10 பெருங்கோடீஸ்வரர்களின் சொத்து இரு மடங்கு உயர்ந்து, 1,125 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேசமயம் வறுமையும், பொருளாதார ஏற்றத் தாழ்வும் அதிகரித்துள்ளது. இதற்கு தற்போதைய வரி விதிப்பு முறை நியாயமாக இல்லாததே காரணம
இதனால், பணக்காரர்கள் மேலும் செல்வந்தர்களாக உயருகின்றனர். அதனால் எங்களைப் போன்ற பெருங் கோடீஸ்வரர்களுக்கு அதிக வரி விதிக்குமாறுகேட்டுக் கொள்கிறோம். ஒவ்வொரு நாடும், பெருங்கோடீஸ்வரர்களுக்கு அதிக வரி விதிப்பதன் வாயிலாக ஓராண்டில் 189 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும்.
இத்தொகை உலக மக்கள்அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தவும், 230 கோடிபேரை வறுமையில் இருந்து மீட்கவும் உதவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த அறிக்கையில், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, பிரிட்டன், நார்வே, டென்மார்க், ஆஸ்திரியா, நெதர்லாந்து,ஈரான் ஆகிய நாடுகளைசேர்ந்த, 102 கோடீஸ் வரர்கள் கையொப்பம் இட்டுள்ளனர்.