ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு முதல் சண்டை நடைபெற்று வருகிறது.
இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதேபோல் ஏமன் அரசுக்கு சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளிக்கிறது. இந்த கூட்டுப்படையில் ஐக்கிய அரபு அமீரகமும் உள்ளடக்கம். இதனால், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி தலைமையிலான கூட்டு படைகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி விமான நிலையம், அபுதாபியின் முஷாபா நகரில் உள்ள அண்டொக் எண்ணெய் நிறுவனத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 17-ம் தேதி டிரோன் தாக்குதல் நடத்தினர்.
இதில், எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 2 இந்தியர்கள், 1 பாகிஸ்தானி என 3 பேர் உயிரிழந்தனர். விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதேவேளை 2 இந்தியர்கள் உள்பட 6 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் ஐக்கிய அரபு அமீரகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அபுதாபியில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், அபுதாபி தாக்குதலில் உயிரிழந்த 2 இந்தியர்களின் உடல்கள் இன்று இந்தியா கொண்டுவரப்பட்டன. இருவரும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் சொந்த மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதையடுத்து, இறுதிச்சடங்கு நடைபெற்று 2 பேரின் உடல்களும் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது. அபுதாபி தாக்குதலில் உயிரிழந்த இரு இந்தியர்களும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற போதிலும் அவர்களின் பெயர் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் அரசு தரப்பில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.