தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன, இந்நிலையில், தமிழகத்தில் பிப்.1 முதல் 20ம் தேதி வரை ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகத்தில் பிப்.1 முதல் 20ம் தேதி வரை ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும். பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி, அரசு மற்றும் தனியார் கலைக்கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும்.
கிராமப்புற மாணவர்கள் அப்லோட் செய்த விடைத் தாள்கள் வந்து சேர்வது தாமதமானாலும் பெற்றுக்கொள்ளப்படும். இறுதி செமஸ்டர் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு மட்டும் நேரடி முறையில் நடத்தப்படும். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இறுதி செமஸ்டர் தேர்வர்களுக்கு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
ஆன்லைன் தேர்வு முறையில் தவறுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பரவல் குறைந்த பிறகே நேரடி வகுப்புகள் நடத்தப்படும். மாணவ சங்க பிரதிநிகள் கூறிய கருத்தின்படியே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது