இஸ்லாமாபாத்:முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக நண்பருக்கு ‘வாட்ஸ் ஆப்’ தகவல் அனுப்பிய பெண்ணுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
நம் அண்டை நாடான பாக்.,கை சேர்ந்தவர் அனிகா அட்டீக். இவர் முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக தனக்கு ‘வாட்ஸ் ஆப்’ வாயிலாக சில தகவல்களை அனுப்பியதாக இவரது நண்பர் பரூக் ஹசானத் என்பவர் 2020ல் புகார் அளித்தார்.
மேலும் ‘பேஸ்புக்’ சமூக வலைதளம் வாயிலாக இதுபோன்ற அவதுாறு தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.’தன் செயலுக்கு அனிகா தன்னிடம் மன்னிப்பு கேட்டு அவதுாறு தகவல்களை அழிக்க வேண்டும்’ என அவர் கோரினார்.
இதற்கு அனிகா மறுத்தார்.இதையடுத்து பாக்., சைபர் கிரைம் பிரிவில் அனிகா அட்டீக் மீது புகார் அளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தன் மீதான குற்றச்சாட்டுகளை அனிகா மறுத்தார்.
குற்றம் சுமத்தியுள்ள பரூக் உடனான நட்பை துண்டித்துக் கொண்டதால், தன்னை மத ரீதியிலான உரையாடலில் உள்நோக்கத்துடன் ஈடுபடுத்தியதாகவும், அப்போது அனுப்பிய தகவல்களை வைத்து பழிவாங்குவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட ராவல்பிண்டி நீதிமன்றம் அனிகா அட்டீக்குக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
பாக்., முன்னாள் ராணுவ சர்வாதிகாரி ஜியா உல் ஹக் ஆட்சியின் போது மத நிந்தனை சட்டம் பாக்.,கில் 1980ல் அமலுக்கு வந்தது.இந்த சட்டத்தின் கீழ் இதுவரை யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
ஆனால் மத நிந்தனை செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் பலர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். சமீபத்தில் கூட பாக்., தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றிய இலங்கை நபர், மத நிந்தனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு வன்முறை கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.