விருத்தாசலத்தில் திருட்டு வழக்கில், சிறுவனை கைது செய்தது தொடர்பான செய்திக்கு மறுப்பு தெரிவித்து, எஸ்.ஐ., வெளியிட்ட ‘ஆடியோ’ பரவி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவர், விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் நான்கு கடைகளை உடைத்து, பணம் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறார் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.இந்நிலையில், ‘இருளர்கள் என்றாலே திருடர்களா’ என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றில், ‘சிறுவன் இருளர் இனம் என்பதால், போலீசார் பொய் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
‘போலீஸ் ஸ்டேஷனில் ஜாதி பெயரை கூறி தாக்கினர்’ என செய்தி வெளியாகியிருந்தது. இந்த வழக்கு விசாரணையை நடத்தும் எஸ்.ஐ., கமல்ஹாசன், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவு:சிறுவனது ஜட்டி பாக்கெட்டில் பழைய 10 ரூபாய் நோட்டுகள், 5 ரூபாய் நாணயங்கள் உட்பட சில்லறை காசுகள் அதிகம் இருந்தன. மேலும், 500 ரூபாய் நோட்டுகள் இரண்டு; 100 ரூபாய் நோட்டுகள் மூன்று இருந்தன.அவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
போலீஸ் ஸ்டேஷனில் யாரும் அடிக்கவில்லை. அவரது தாய், வழக்கறிஞர் முன்னிலையில் தான் விசாரித்தோம்.அவர், பாலக்கரையில் இருந்து பஸ் நிலையம் சென்ற ‘சிசிடிவி’ காட்சி பதிவுகளை சேகரித்து வைத்துள்ளோம். தவறு செய்தவர்கள், திருட்டு தொழில் செய்பவர்களுக்கு ஜாதி சாயம் பூசினால், தர்மம் கண்டிப்பாக நசுங்கி விடும். தவறு செய்ய வாய்ப்பாக அமையும். தவறுக்கு யாரும் துணை போகக் கூடாது என, வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.