தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பிப்ரவரி 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை 22-ந்தேதி நடைபெறும் என்றும், கொரோனா கட்டுப்பாடுகளுடன் தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் தொடக்கம் – ஜனவரி 28-ந் தேதி. வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாள் – பிப்ரவரி 4-ந் தேதி. வேட்புமனுக்கள் ஆய்வு செய்தல் – பிப்ரவரி 5-ந் தேதி. வேட்புமனு திரும்ப பெறுதல் – பிப்ரவரி 7-ந் தேதி. வாக்குப்பதிவு – பிப்ரவரி 19-ந் தேதி. வாக்கு எண்ணிக்கை – பிப்ரவரி 22-ந் தேதி. தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும் நாள் – பிப்ரவரி 24-ந் தேதி. தேர்ந்தெடுக்கப்படும் வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு நாள் – மார்ச் 2-ந் தேதி. மறைமுக தேர்தல் மூலம் மாநகராட்சிகளின் மேயர், துணை மேயர், நகராட்சி-பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத்தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான கூட்ட நாள் – மார்ச் 4-ந் தேதி.
வேட்புமனு தாக்கல் செய்தல், வேட்புமனுக்களை ஆய்வு செய்தல், திரும்பப்பெறுதல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்தல் ஆகியவற்றை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவு செய்திட இந்த ஆணையத்தால் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வரும் 29-ம் தேதி சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாளைமுதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நிலையில் பணி நாளான சனிக்கிழமையும் மனு தாக்கல் செய்யலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.