வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள வலிமை படம் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது. இந்த படத்தை அடுத்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் இரண்டாவது வாரத்தில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் ஆலோசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அஜித்குமார் மீண்டும் வினோத் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இது அஜித்துக்கு 61-வது படம். இந்த படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார்.
படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. இதற்காக ஐதராபாத்தில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் படப்பிடிப்பில் அஜித் இணைவார் என்றும் கூறப்படுகிறது. அஜித்தின் 61-வது படத்துக்கான நடிகர், நடிகைகள் தேர்வும் தீவிரமாக நடக்கிறது.
இந்த படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க பிரபல இந்தி நடிகை தபுவிடம் பேசி வருவதாக தகவல் பரவுகிறது. படத்தின் கதைக்கு வயதான கதாநாயகி தேவை என்பதால் தபுவை பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. நேர்கொண்டபார்வை படத்திலும் வயதான கதாநாயகி வித்யாபாலன் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே 2000-ல் வெளியான ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் அஜித் ஜோடியாக தபு நடித்து இருந்தார்.